சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

“விஜய் மீது நம்பிக்கையில்லாததால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை” - சீமான் விமர்சனம்

செய்திப்பிரிவு

ஆட்சியில் பங்கு என்று சொல்லியும் விஜய் மீது நம்பிக்கை இல்லாததால் யாரும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொல்கிறார் விஜய். திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் பங்கு தருகிறோம் வாருங்கள் என்று கூப்பிட்டால் மற்ற கட்சிகள் வருவார்கள். ஆனால் ஆட்சிக்கே வராத, தேர்தலில் ஒரு முறை கூட நிற்காத ஒருவர் அழைக்கும் போது அது நம்பிக்கைக்குரியதாக இருக்காது.

          

அதனால் யாரும் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. அவர் ஒருமுறை 5 ஆண்டுகால ஆட்சியில் இருந்துவிட்டு, அடுத்தமுறை அழைத்தால் அனைத்து கட்சிகளும் கூட்டணிக்காக அவருடன் செல்வார்கள். அதேபோல் விஜய் ஏன் என்னை கூட்டணிக்கு அழைக்க வேண்டும்? நான் கூப்பிட்டு தான் விஜய் என் கூட்டணிக்கு வரவேண்டும்.

நான் 16 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்பவன். கோட்பாட்டில், அனுபவத்தில், வயதில் விஜய் என்னை விட சிறியவர். அதேபோல் என்னை பொறுத்தவரை கூட்டணி கூட்டத்தை கூட்டுவதில் அர்த்தம் இல்லை. இங்கு கொள்கை தான் அரசியல், கூட்டமல்ல. மறைந்த தேமுதிக நிறுவனர் தலைமையில் மக்கள் நல கூட்டணி என்று ஒன்று அமைந்ததற்கு காரணம் அவர் 10 சதவீத வாக்குகள் வைத்திருந்தார். இதனால் ஒரு நம்பிக்கையுடன் பலர் கூட்டணி அமைத்தனர். தற்போது ஆட்சியில் பங்கு கொடுக்கும் அளவுக்கு எந்த கட்சி நேர்மையாக இருக்கிறது?

தமிழக அரசு மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியது, தான் அரசியலுக்கு வந்ததை பார்த்து பயந்து தான் என்று விஜய் கூறுகிறார். முன்னதாக பிஹாரில் மகளிருக்கு ரூ.10 ஆயிரம் பாஜக வழங்கியதும், விஜய்க்கு பயந்து தானா? அவராக அவ்வாறு நினைத்துக் கொள்கிறார். சேலத்தில் அவர் பேசும்போது அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி, தற்போது பழனிசாமியிடம் இருக்கிறது. திமுகவை அண்ணா தொடங்கி தற்போது அது முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கிறது.

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனித்து கட்சி ஆரம்பித்திருக்கிறேன் என்று என் வசனத்தை அவர் பேசியிருக்கிறார். திரைபிம்பத்தை கொண்ட விஜய் ரசிகர்களுடன் கூடி நிற்கிறார். நான் அப்படி அல்ல. சாதாரணமாக வந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து நிற்கிறேன். என் வசனத்தை அவர் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT