சீமான்
சென்னை: “8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி வழங்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மருத்துவத் துறையில் கண்மூடித்தனமாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசின் செயல்பாடு உள்ளது” என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவோம், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் என தேர்தலில் வாக்குறுதியளித்து விட்டு, இப்போது, புதிதாக 8 ஆயிரம் மருத்துவமனைகளை திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு மருத்துவத் துறையில் கண்மூடித்தனமாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு, வாக்கு செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்கு செய்யும் ஜனநாயகத் துரோகமாகும்.
மேலும், அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றை தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காமல், 8 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி வழங்கப்படுகிறது?
மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக் கொள்கை முடிவாக கொண்டதையே தவெக அரசும் பின்பற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு மருத்துவத் துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, மருத்துவத் துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம் உயர்த்தி, தரமான மருத்துவ சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.