சீமான்

 
தமிழகம்

“திருப்பரங்குன்றம் முருகன் மீது திடீரென ஏன் இவ்வளவு பற்று?” - சீமான் சீற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: “பல கோடி மக்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வழியில்லை. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கிறார்கள். திடீரென முருகன் மீது ஏன் இவ்வளவு பற்று வருகிறது?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பல கோடி மக்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வழியில்லை. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள்? இப்போதுதான் இவர்களது கண்களுக்கு முருகன் தெரிகிறாரா?. திடீரென முருகன் மீது ஏன் இவ்வளவு பற்று வருகிறது? மலைகளில் கல்குவாரி உருவாக்கி அழிக்கும்போது யாரும் வருவதில்லையே. ஏனென்றால் 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. சாதி, மத, உணர்ச்சி என்பது எப்போதும் ஆபத்தானது.

பாஜகவின் சிந்தனை ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவது அல்ல. அதைப் பிரித்து, சிதைத்து தங்களுக்கான அதிகாரத்தை நிறுவுவது தான் பாஜகவின் கோட்பாடு. அதை இந்த நிலத்திலும் நிறுவ நினைக்கிறார்கள். ஒற்றுமையாக இருக்கிற தமிழ் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். தமிழர்களுக்கு இறைவழிபாட்டை சொல்லிக்கொடுக்க அவர்கள் நினைப்பது தான் இதில் வேடிக்கை.

அதற்காக ஓர் அமைதியாக இருக்கும் சமூகத்தை குலைப்பதற்கான முயற்சியை நீதிபதி செய்வதுதான் வருத்தமாக இருக்கிறது. எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லும் என்றால், இந்த நாட்டை நிர்வகிப்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களா அல்லது நீதிமன்றமா? இது அற்ப அரசியலாகும்.

தமிழகத்தில் இந்தப் பிளவுகளை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இதற்கு அதிமுகவும் கூட்டணி தர்மத்துக்காக எதிர்த்துப் பேச மறுக்கிறது, எஜமான் கோபித்துக்குக் கொள்வார் என்று. இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தேர்தலில் நிச்சயம் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

SCROLL FOR NEXT