நாம் தமிழர் கட்சி சார்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் போரூரில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நிர்வாகிகள் தங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் இன்றி, வேட்பாளர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 21-ல் திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்த நாதக ஆயத்தமாகி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி மாநிலம் முழுவதும் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டும் பொறுப்பு தொகுதி வாரியாக வேட்பாளர்களிடமும், மாவட்டத் தலைவர்களிடமும் ஒப்படைக் கப்பட்டுள்ளன. அதிகளவில் மக்களையும், தொண்டர்களையும் மாநாட்டுக்காக திரட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் நேற்றைய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 234 தொகுதிகளுக்கும் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம், சீமான் தலைமையில் போரூரில் இன்று (பிப்.7) நடைபெற உள்ளது. இதில், தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பிரச்சார முறைகள், வாக்குச் சேகரித்தல், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உள்ளூர்பிரச்சினைகளுக்கு அளிக்க வேண்டிய முன்னுரிமை, ஆளும் கட்சி நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்து வைத்தல், தொகுதிகளில் எவ்வாறு திறம்பட செயல்படுவது உள்ளிட்டவை குறித்து வேட்பாளர்களுக்கு சீமான் அறிவுரைகளை வழங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.