நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம்
சென்னை: “நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன். அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையை தருகிறேன்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கள்ளக்குறிச்சியில் பேசும்போது, “வலிமை மிக்க ஆயுதம் வாக்கு; ஒற்றை வாக்கை உலகம் திரும்பிப் பார்க்க வைக்கும் வாக்காக மாற்ற முடியும். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிசாமி ஆட்சியை பார்த்துவிட்டீர்கள்; ஒருமுறை ஆட்சியை என்னிடம் தாருங்கள். நல்ல கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாக தருகிறேன்.
நான் ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை மூட முடியும், பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட முடியும், நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் மறுபடியும் என்னால் மலைகளை, ஆற்று மணலை உருவாக்க முடியாது, ஏனென்றால் அது இயற்கையின் கொடை.
நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன். அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையை தருகிறேன். அதற்கு சம்பளம் தருகிறேன். யார் கையையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு வாழக்கூடிய தற்சார்பு வாழ்க்கையை உங்கள் பிள்ளையாகிய நான் தருவேன்.
இன்று ஒரு தொகுதிக்கு ரூ. 25 கோடி கொடுத்து, ஒருவருக்கு ரூ. 2000 கொடுக்கிறவன் தான் வேட்பாளர். அப்படி என்றால் ரூ.25 கோடி முதலீடு செய்கிறவன் லாபத் தேவைக்கு செய்கிறானா? மக்கள் சேவைக்கு செய்கிறானா? உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறவன், எப்படி உங்களுக்கு சேவை செய்வான் என்று எப்படி நம்புகிறீர்கள்? . கொஞ்சம் சிந்தித்து வாக்களியுங்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.