தமிழகம்

“பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்துவதால் வாக்கு மதிப்பும் உயர்கிறது” - சீமான் விமர்சனம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்துவதால் வாக்காளர்களின் வாக்கு மதிப்பும் உயர்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்நியர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியாரை போன்று வீரத்தோடு அநீதிக்கு எதிராக அரசியல் போர் புரிந்து வருகிறோம். ஏற்கெனவே 65 சதவீதம் பேர் தான் வாக்களிக்க வருகின்றனர். சிலர் பணம், மது கொடுத்தால் தான் வாக்களிக்க வருகின்றனர். அப்படி இருக்கும்போது, இருக்கிற வாக்காளர்களை நீக்கினால் எப்படி தேர்தல் சரியாக இருக்கும். சில தொகுதிகளில் சில நூறு வாக்குகள் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது.

ஆனால் ஒவ்வொரு தொகுதிக்கும் பல ஆயிரம் முதல் லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கியுள்ளனர். ஜனநாயக நாட்டில் வாக்கு தான் குடிமகனின் கடைசி உரிமை. அதையும் காப்பாற்ற போராட வேண்டியுள்ளது. அந்த காலக்கட்டத்தில் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். ஆனால் தற்போது ஆட்சியாளர்களே யார் வாக்காளர்களாக இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கின்றனர்.

எங்களுக்கு வாக்கு அளித்தால் வைத்திருப்போம். இல்லாவிட்டால் தூக்கிவிடுவோம் என்கின்றனர். அதனால் எஸ்ஐஆர்-யை ஜனநாயக படுகொலை என்று நிர்மலா சீதாராமனின் கணவரே கூறுகிறார். திமுகவும் ஆட்சியில் இருப்பதால் தங்களுக்கு உரிய வாக்காளர்களை வைத்து கொண்டு மற்றவர்களை தூக்கிவிட்டனர். அதில் எங்களைப் போன்றோர் தான் பாதிக்கப்படுகின்றனர்.

திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதியும், தமிழக அரசும் இதுபோன்று நடந்திருக்க கூடாது. இந்து சமய அறநிலையத் துறை சிக்கந்தர் தர்காவில் ஆடுகளை பலியிட கூடாது என்று தடுத்ததால் தான் இந்த பிரச்சினையே உருவானது. அறநிலையத் துறை, முதல்வர் தலையிட்டு நல்லிணக்க குழுவை ஏற்படுத்தி, அவரவர் வழிபாட்டில் யாரும் தலையிடக் கூடாது என செய்திருக்க வேண்டும். மதசார்பற்ற அரசு என்றால் அரை மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்திருக்கலாம்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று திமுகவும், இந்துகளுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று பாஜகவும் இந்த பிரச்சினையை முடிக்கவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஜகவுக்கு திடீரென முருகன் மீது பாசம் வரக் காரணம் என்ன ? தேர்தல் வரும் போது இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் திருமுருக பெருவிழா நடத்தியபோது அனைவரும் சிரித்தார்கள். தற்போது வேல் எடுத்து கொண்டு வருகின்றார்கள்.

நூறு நாள் வேலை திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. நம் நாட்டில் இன்றளவும் 28 சதவீதம் பேர் பசியுடன் தூங்குகின்றனர். ஏற்கெனவே மத்திய அரசுக்கு ரூ.186 லட்சம் கோடி கடன்; தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன். சம்பளம் அளிக்க காசு இல்லை. அப்படியிருக்கையில் உழைக்கும் மக்களை உழைக்காமல் சம்பளம் கொடுக்கின்றனர். இதனால் விவசாயத்துக்கு ஆள் கிடைக்காமல் போய்விட்டது. இத்திட்டத்தில் வெட்டிய குளங்கள், அமைத்த சாலைகள், நடவு செய்த மரங்கள் எங்கே ? உழைக்காமல் உண்பதும் ஒரு வகை திருட்டு தான் என்கிறார் மகாத்மா காந்தி. நூறு நாள் திட்டமே வேண்டாம் என்கிறோம். அதை 125 நாட்களாக உயர்த்தியுள்ளனர்.

உழைத்தால் உற்பத்தி பெருகி நாடு வளரும். தற்போது தமிழகத்தில் விவசாயப் பணிக்கு ஆளில்லாமல் வட இந்தியர்கள் வந்துவிட்டனர். பிப்.21-ல் மாநாடு நடத்துகிறோம். அதில் 234 தொகுதிகளிலும் யார் வேட்பாளர்கள் என்பதை அறிவிப்போம். ரூ.3,000, ரூ.5,000 என பொங்கல் பரிசுத் தொகை உயர்ந்து கொண்டே போவதன் மூலம் நமது வாக்கு மதிப்பும் கூடிக் கொண்டே செல்கிறது என்பது தான் அர்த்தம். பொங்கல் பரிசுத் தொகை வாங்கி கொண்டு விவசாயிக்கு வாக்கை அளியுங்கள்” என்று சீமான் கூறினார்.

SCROLL FOR NEXT