“நீங்கள் நோட்டை வாங்கி ஓட்டை விற்றால், அவர்கள் ஓட்டை வாங்கி நாட்டை விற்பார்கள்” என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் "மொழி அழிந்தால் ஒரு இனம் அழியும். இனம் அழிந்தால் அந்த நாடு அழியும். தமிழர் எழுச்சி பெற வேண்டும் என்றால் தூய தமிழரின் ஆட்சி வர வேண்டும் என்ற போது தான் இந்தக் களத்துக்கு நாங்கள் வந்தோம். இந்த நிலத்தை விட்டு நான் ஆந்திராவுக்குச் சென்றால் இந்து, இஸ்லாமியர் என்று சொல்ல முடியாது, நான் தமிழன் என்று தான்சொல்ல முடியும். இந்த நாட்டில் இருந்து உலகில் எங்கு சென்றாலும் நீ தமிழன் அது தான் உனது அடையாளம். சிங்கத்தின் குகைக்குள் சிறுநரிக்கு இடம் கொடுத்தோம். செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்.
இது போர். தீய திராவிடர்களுக்கும், தூய தமிழர்களுக்குமான அரசியல் போர். இன்னும் ஒரு முறை இந்த ஆட்சி தேர்ச்சியானால், இந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறும். இவர்கள் மாற்றுவார்கள். இங்கு எல்லா இடங்களிலும் எல்லா மொழிகளிலும் எழுதி வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் ஊர்களில் நமது தமிழ் மொழியை எழுதி வைப்பது இல்லை.
மேலும் 5 வருடம் ஆட்சியை அவர்களிடம் கொடுத்தால் நீங்கள் இந்த திருவண்ணாமலை மாவட்டத்தை மறந்து விடுங்கள். இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் துடித்துக்கொண்டிருக்கிறோம் மாற்றத்துக்காக. உலகெங்கும் மாறுதல்களும், புரட்சியும் மன்னர்களால், மந்திரிகளால் உருவாக்கப்பட்டது இல்லை. சாதாரண மக்களால் உருவாக்கப்பட்டது.
மாற்றம் என்பது சொல் அல்ல செயல். உலகத்துக்கு சோறு போட்ட கூட்டத்தை, அரிசி, பருப்புக்கு கையேந்தும் கூட்டமா மாற்றி நிறுத்தியுள்ளனர். நீங்கள் நோட்டை வாங்கி ஓட்டை விற்றால், அவர்கள் ஓட்டை வாங்கி நாட்டை விற்பார்கள். வாக்கு வலிமை மிக்க ஆயுதம், அதனை அநீதிக்கு எதிராகத் தூக்கு. இந்த தேர்தல் நமக்கு ஒரு புரட்சிகர மாறுதலுக்கான அரசியல் போர். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்” என்றார்.