நோட்டுக்கு வாக்கை விற்றால், அது நாட்டுக்கு வேட்டு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாதக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழ்நாட்டை அதிமுகவும், திமுகவும் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஊழல், லஞ்சத்தை பெருக்குவதிலும், இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும், மக்களின் நலன்களை கெடுப்பதிலும் இந்த 2 கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் வாழ விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத கட்சிகள் தான் இவை.
தமிழகத்தில் ரூ.10.5 லட்சம் கோடிக்கு கடன் வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடி தான். வட்டியே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கட்டுவதால் ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. சாராயம் விற்று ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் பெற்று, அதில் அரசு நடத்தப்படுகிறது.
ஃபிரிட்ஜ், தாலிக்கு தங்கம், 6 சிலிண்டர், ரூ.8 ஆயிரம் கூப்பன் இதற்கெல்லாம் எங்கிருந்து காசு வரும். நோட்டுக்கு வாக்கை விற்றால், அது நாட்டுக்கு வேட்டு. திருடனில் என்ன சின்ன திருடன், பெரிய திருடன். திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான். இவ்வாறு அவர் பேசினார்.