பிரச்சாரத்தில் சீமான். படம்: ம.பிரபு

 
தமிழகம்

‘கத்திக் கத்தி செத்துப்போ’ என என்னை சபித்துவிட்டனர் - சீமான் ஆதங்கம்

செய்திப்பிரிவு

சென்னை பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என என்னை சபித்துவிட்டனர்” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மலையாள நடிகர் மம்முட்டியிடம், ஏன் நீங்கள் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை? என்று சிலர் கேட்டனர். அதற்கு அவர், “எங்கள் மக்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதில்லை.” என்று கூறினார்.

          

ஆனால் இங்கு நீங்கள் (மக்கள்) திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் தலைவர்களை தேடுவதில்லை. முன்பு திரையரங்கில் படம் பார்க்கும்போது விசிலடித்தீர்கள். இப்போது தெருவில் விசிலடித்துக் கொண்டிருக்கிறீர்கள். மரத்தை பற்றி உங்களுக்கு கவலையில்லை. மலையை வெட்டுவதை பற்றி உங்களுக்கு கவலையில்லை.

நீங்கள் வாழும் பகுதியை ஆக்கிரமிப்பு என்று இடிக்கின்றனர். அவர்கள் ஏரி, குளம், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கின்றனர். கடற்கரையை ஆக்கிரமித்து கல்லறை கட்டுகின்றனர். நான் சபிக்கப்பட்டு விட்டேன். கூட்டங்களில் இப்படியே கத்திக் கத்தியே பேசி செத்துப்போ என என்னை சபித்துவிட்டனர். மக்களை ஏமாற்றுவது எளிது. ஆனால் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது கடினம். நானும் 15 ஆண்டுகளாக கத்திக் கத்திப் பேசி பார்த்து விட்டேன். உணர்த்துவது மிக கடினமாகத் தான் இருக்கிறது.

ஆனால் ரூ.2 ஆயிரம் தருகிறேன், ரூ.2500 தருகிறேன், கிரைண்டர் தருகிறேன், மிக்ஸி தருகிறேன், ரூ.8000 கூப்பன் தருகிறேன் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வந்தவரெல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள். வீதியில் இறங்கிப் போராடும் செவிலியர்கள், அரசு மருத்துவர்கள், விவசாயிகள் கேட்பதை கொடுக்காமல், இலவசங்களை வாரி இறைக்கின்றனர். எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு இருக்காது. ரூ.8000-த்துக்கான கூப்பனை முதல்வரே வைத்துக் கொள்ளட்டும், அந்த முதல்வர் பதவியை மட்டும் எனக்கு தந்து விடுங்கள்.

எங்கள் கட்சி வேட்பாளர்கள் எல்லாம் புதியவர்கள். வாக்குக்கு காசு கொடுப்பதில்லை. சாதி, மதத்தை நாங்கள் குறிப்பிடுவதில்லை. பெரிய பெரிய அமைச்சர்களின் மகனோ, மத்திய அமைச்சர்களின் மகன்களோ எங்கள் கட்சியில் இல்லை. சாதாரணமானவர்கள் நாங்கள். ஆனால் 36 லட்சம் வாக்குகளை பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறோம். எங்கள் கட்சியை அங்கீகரிப்பட்ட கட்சியாக மாற்றியது நீங்கள். இந்த முறை சிந்தியுங்கள். எண்ணத்தை மாற்றுங்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். எல்லாவற்றையும் மாற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT