சீமான்

 
தமிழகம்

திருத்தணி முருகனை வழிபட்டு சீமான் நாளை பிரச்சாரம் தொடக்கம்

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தேர்தல் பிரச்சாரத்தை திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு செய்து நாளை (மார்ச் 23) தொடங்குகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட களப் பணிகளை அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் இறங்குவதுடன், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.

          

இதற்கான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்டார். அதன்படி முதற்கட்ட தேர்தல் சுற்றுப்பயணமாக திருத்தணியில் சீமான் பிரச்சாரத்தை நாளை (மார்ச் 23) தொடங்குகிறார். காலை 10.30 மணிக்கு திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தி அங்கிருந்து வாகன பரப்புரையை சீமான் ஆரம்பிக்கிறார்.அன்றைய தினமே சோளிங்கர், ராணிப்பேட்டையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து மார்ச் 24-ல் வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளிலும், 25-ல் கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரத்திலும், 26-ல் மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சியிலும், 27-ல் சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசியிலும், 28-ல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடியிலும் பிரச்சாரம் செய்கிறார்.

SCROLL FOR NEXT