ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ள பாம்பன் பழைய ரயில் பாலம்.

 
தமிழகம்

பாம்பன் பழைய ரயில் தூக்குப் பாலத்தின் ஒரு பகுதி அகற்றம்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பன் கடல் மீதுள்ள பழைய ரயில் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

நூற்றாண்டை கடந்த இந்த பாம்பன் ரயில் பாலத்தின் தூக்குப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினை மற்றும் விரிசல் காரணமாக, இப்பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் 2019-ல் தொடங்கி, 6.4.2025-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பாம்பனில் உள்ள ரயில் பாலங்களை கடந்துதான் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் சென்று வருகின்றன. இந்த கப்பல்கள், படகுகள் செல்வதற்காக புதிய ரயில் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஒவ்வொரு முறை தூக்கப்படும்போதும், பழைய ரயில் தூக்குப்பாலமும் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால், பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) பழைய பாம்பன் பாலம் அதன் நடுவில் இருந்த தூக்குப்பாலம், கர்டர் பாலம் மற்றும் தண்டவாளங்களை ரூ.2.53 கோடியில் அகற்ற ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து, பழைய பாலத்தை அகற்றும் பணி பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனம், தூக்குப்பாலத்தின் மேற்கு பகுதியில் கேஸ் கட்டிங் செய்து பாலத்தை துண்டு துண்டுகளாக அகற்றும் பணியை செய்யத் தொடங்கியது.

தற்போது, பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு வெட்டி அகற்றப்பட்ட தூக்குப்பாலத்தின் பாகங்கள் அனைத்தும் பாம்பன் ரயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தூக்குப்பாலத்தின் மற்றொரு பகுதியை வெட்டி அகற்றும் பணி ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், வெட்டி எடுக்கப்பட்ட பாம்பன் பழைய தூக்குப்பாலத்தை நினைவுச் சின்னமாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT