தமிழகம்

ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலக வளாகம்: தமிழக அரசின் அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: நவீன வசதி​களு​டன் கூடிய புதிய சட்​டப்​பேரவை மற்றும் தலை​மைச் செயல​கம் சென்னை பட்​டினப்​பாக்​கத்​தில் அமைக்​கப்பட உள்​ளது. இதற்​கான ஒப்​புதலை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்று தவெக கடந்த மே 10-ம் தேதி ஆட்​சி​யமைத்​தது. அதன்​பின்​னர் அலு​வல் மற்​றும் நிர்​வாக ரீதி​யாக பல்​வேறு மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி, தற்​போது தலை​மைச் செயல​கத்​தில் உள்ள பிர​தான புனித ஜார்ஜ் கோட்​டை​யில் 3-வது தளத்​தில் செயல்​பட்டு வரும் முதல்​வர் அலு​வல​கம், நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்​றப்பட உள்​ளது.

இதற்​கிடை​யில், தற்​போதைய தலை​மைச் செயல​கத்​தில் இடப் பற்​றாக்​குறை, வாகன நிறுத்​தும் இடவசதி குறை​பாடு மற்​றும் புதிய கட்​டிடங்​களை அமைப்​ப​தற்​கான கட்​டுப்​பாடு​கள் போன்ற குறை​பாடு​கள் உள்​ளன. இதனால் தலை​மைச் செயல​கத்தை வேறு இடத்​துக்கு மாற்ற தவெக அரசு முடிவு செய்​தது.

இதையடுத்து நவீன வசதி​களு​டன் கூடிய புதிய சட்​டப்​பேரவை மற்​றும் தலை​மைச் செயல​கம் அடங்​கிய புதிய கட்​டிட வளாகம் சென்​னை​யில் 20 லட்​சம் சதுர அடி​யில் ரூ.1,200 கோடி​யில் உரு​வாக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் கடந்த செப்​டம்​பர் 3-ம் தேதி அறி​வித்​தார்.

இதைத் தொடர்ந்​து, புதிய தலை​மைச் செயல​கத்​துக்​காகக் கோயம்​பேடு, கிண்​டி​யில் உள்ள நெடுஞ்​சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்​டினப்​பாக்​கம் மற்​றும் நந்​தம்​பாக்​கம் பகு​தி​களில் உள்ள இடங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டன. அதில் முதல்​வர் விஜய் பரிந்​துரை​யின்​படி பட்​டினப்​பாக்​கம் இறுதி செய்​யப்​பட்​டது.

இதற்​காக பட்​டினப்​பாக்​கத்​தில் 25.55 ஏக்​கர் நிலம் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. அரசு துறை​களுக்​குச் சொந்​த​மான அந்த நிலங்​களை எடுத்து பணி​களைத் தொடங்க முதல்​கட்ட ஒப்​புதல் வழங்கி பொதுத் துறை செயலர் சுந்​தர​வல்லி நேற்று முன்​தினம் அரசாணை வெளி​யிட்​டுள்​ளார்.

அதன்​படி, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் (21.76 ஏக்​கர்), சென்னை மாநக​ராட்சி (0.93 ஏக்​கர்) மற்​றும் வரு​வாய்த் துறைக்​குச் சொந்​த​மான (1.73 ஏக்கர்) இடங்​களை ஒருங்​கிணைத்து 25.55 ஏக்​கர் பரப்​பில் இந்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்​கப்​படு​கிறது. அனைத்து நவீன வசதி​களு​டன் கூடிய புதிய சட்​டப்​பேரவை வளாகம், தலை​மைச் செயலக கட்​டிடம் தோராய​மாக 20 லட்​சம் சதுர அடி பரப்​பில் அமைய​வுள்​ளது. இந்​தத் திட்​டத்​துக்​கான விரி​வான அறிக்​கையை 3 மாதங்​களுக்​குள் பொதுப்​பணித் துறை சமர்ப்​பிக்க வேண்​டும். மேலும், இத்​திட்ட பணி​களைத் துரிதப்​படுத்த, கட்​டிட வடிவ​மைப்பு நிறு​வனத்தை முடிவு செய்ய, திட்ட வரைபடம், வடிவ​மைப்பு ஆகிய​வற்றை இறுதி செய்ய, கட்​டிடத்​துக்​கான வரைபடம், இறுதி வடிவ​மைப்பை முடிவு செய்து அளிக்க என 3 சிறப்பு குழுக்​களை அமைக்​க​வும் தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​ன​தாக இடநெருக்​கடி காரண​மாக தலை​மைச் செயல​கத்தை மாற்​று​வது தொடர்​பாக ஏற்​கெனவே பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா 2003-ல் தலை​மைச் செயல​கத்​துக்​கான புதிய வளாகம் அமைக்க திட்​ட​மிட்​டார். அந்த திட்​டம் நடை​முறைக்கு வரவில்​லை. அதன்​பின் 2010-ல் திமுக ஆட்​சி​யில் சென்னை ஓமந்​தூ​ரார் அரசினர் தோட்​டத்​தில் தலை​மைச் செயலக கட்​டிடம் கட்டி திறக்​கப்பட்​டது. ஆனால், அதி​முக ஆட்​சிக் காலத்​தில், புதிய தலை​மைச் செயல​கத்​துக்​காகக் கட்​டப்​பட்ட கட்​டிடம், ஓமந்​தூ​ரார் அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யாக மாற்​றப்​பட்​டது.

SCROLL FOR NEXT