சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். | படம்: ம.பிரபு |
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் நேற்று 5-வது நாளாக போராட்டம் நடத்திய 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று 5-வது நாளாக எழும்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து 15 மண்டபங்களில் தங்க வைத்தனர்.
ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டத்தால் போலீஸாருக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டம் குறித்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “எங்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித் தரவேண்டும்.
அதுவரை போராட்டம் தொடரும். தெருத்தெருவாக ஆசிரியர்கள் சுற்றிவந்து போராடும் நிலை இருக்கிறது. ஆசிரியர்களை இதுபோல அவமானப்படுத்தும் செயல் வேறு எதுவும் இருக்காது. கடுமையான போராட்டங்களுக்குள் எங்களை இறக்குவதே காவல்துறைதான்’’ என்றார்.