சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடத்திய 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் நீடிக்கும் என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டைக் களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவிப்பதும் கடந்த 6 நாட்களாக தொடர்ந்தது.
ஆசிரியர்கள் மயக்கம்: இந்நிலையில், 7-வது நாளாக புத்தாண்டு தினமான நேற்று 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை எழும்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து சாலையில் மண்டியிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சில ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். சிலர் காயமடைந்தனர்.
‘‘கைது செய்த பிறகு, ஆசிரியர்கள் என்றும் பாராமல், போலீஸார் தரக்குறைவாக நடத்துகின்றனர். கழிவறைகள் இல்லாத கட்டிடத்தில் அடைத்தும், உணவு, தண்ணீர் தராமல் காலம் தாழ்த்தியும் மறைமுகமாக சித்ரவதை செய்கின்றனர்’’ என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.
‘போராட்டம் தொடரும்’ - போராட்டம் குறித்து எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நேற்று கூறியதாவது: டிப்ளமா படித்தவர்களைவிட எங்கள் ஊதியம் குறைவாக உள்ளது. நாங்கள் வெறும் ரூ.20,600 மட்டுமே ஊதியமாகப் பெறுகிறோம். இதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலும், காவல் துறை தினமும் எங்களை கைது செய்து, இங்கும் அங்கு
மாக அலைக்கழிப்பதைவிட, கோரிக்கைநிறைவேறும் வரை சிறையில் அடைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என எது வந்தாலும், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பாஜக, கம்யூனிஸ்ட்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஒருவாரமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை அழைத்துப் பேசாமல் கைது செய்வதும், வழக்கு போடுவதும் சரியானதல்ல. புத்தாண்டு தினத்தில்கூட போராட்டம் நடத்துகின்றனர். இதில் இருந்தே அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு உணரவேண்டும். எனவே, இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.