சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்.

 

படம்: அகிலா ஈஸ்வரன்.

தமிழகம்

“வாக்குறுதி எண் 311... கண்ணீரை துடைப்பேன் என்றீர்களே..!” - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமும் பின்புலமும்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

பாரதி ஆனந்த்

சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று (டிச.31) 6-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் நேற்று (டிச.30) போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸார், ‘அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும், “எங்களை எதுவும் தடுக்காது; இப்போது இல்லையென்றால் எங்களுக்கு விடிவு காலம் எப்போது?” என்று முந்தைய காலக்கட்டங்களைவிட உறுதியுடன் போராடி வருகின்றனர் ஆசிரியர்கள்.

“15 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கோருகிறோம். நியாயம் கேட்டுப் போராடினால் வழக்குப் பதிவு செய்கிறீர்களே. முந்தைய ஆட்சியில் எங்களை காவல் துறை மோசமாக நடத்தியபோது கண்டித்தீர்கள். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்கள் கண்ணீரைத் துடைப்பேன் என்றீர்களே. அந்த கண்ணீர் துடைக்கும் கரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு, போராட்டக் களத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தின் பின்புலம், கள நிலவரம், அரசின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் கண்டனக் குரல்கள் என இந்தப் பிரச்சினையை சற்றே தெளிவாக அலசுவோம்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன? - கடந்த 2009 மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அடுத்த நாளான 2009 ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.

அதாவது, 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.

அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்கள் இடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது என்பதே போராட்டத்தின் ஆணிவேர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலம் முடிந்து, திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ‘சொன்னது என்னவானது?’ என்ற கேள்வியையும் கேட்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது... - ஏனென்றால், இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்தியபோது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (வாக்குறுதி எண் 311) அளிக்கப்பட்டிருந்தது.

3 உறுப்பினர் குழு... - வாக்குறுதி ஒருபுறம் கிடப்பில் கிடக்க, கடந்த 2022 டிசம்பரில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 2023 ஜனவரியில் 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் கூட இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை; ஊதிய முரண்பாடும் களையப்படவில்லை.

இந்நிலையில்தான் முந்தைய தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதியை இந்தத் தேர்தலுக்காவது நிறைவேற்றுங்கள் என்று கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஒரு தற்காலிக தீர்வாவது கிடைத்துள்ளது, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது, நமக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

“திமுக ஆட்சி வந்ததும், எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றுதான் நாங்கள் நம்பினோம். ஆனால் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று களத்திலிருந்து குமுறல்கள் ஒலிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் கண்டனக் குரல்: “திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் இதுவரை இந்தப் பிரச்சினைக்கும் முடிவு எட்டப்படவில்லை.

இது தொடர்பாக ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு இதுவரை மூன்று முறை மட்டுமே கூடி கருத்துகளைக் கேட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பது ஆசிரியர்களை ஏமாற்றும் செயல்.

பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அரசு போராட்டத்தை கலைக்க பேச்சுவார்த்தை நடத்துவது, காவல் துறையின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவது என நடந்து கொள்வது ஜனநாயகத்துக்கு எதிரானது” என்பதே எதிர்க்கட்சிகளின் கண்டனக் குரலின் சாராம்சமாக உள்ளது.

கள நிலவரம் என்ன? - இந்நிலையில், டிச.26 தொடங்கி 6-வது நாளாக நடைபெறும் போராட்டம் குறித்து பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் - மதுரை மாவட்டச் செயலாளர் கு.குமரேசன், ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் கூறியது: “2009-ம் ஆண்டில் இருந்து நாங்கள் போராடுகிறோம். கடந்த முறை நாங்கள் 19 நாட்கள் போராடியபோது ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழுவால் இதுவரை எந்தப் பயனும் இல்லை.

நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில்தான் போராடுகிறோம். ஆனால் இந்த முறை காவல் துறை எங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்குக் கடுமையாக உள்ளது. பெண்கள் என்று கூட பாராமல் தலைமுடியை பிடித்து இழுத்துச் செல்கின்றனர். குடும்பத்துடன் போராடும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் குழந்தைகள் முன்னால் அவர்களைக் கடுமையாக நடத்துகின்றனர். முந்தைய ஆட்சிகளில் காவல் துறை அடக்குமுறையை கண்டித்தவர்கள் தான் இப்போது அதைவிட கூடுதலாக அடக்குமுறையை ஏவுகின்றனர்.

எஸ்​எஸ்​டிஏ இயக்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஜே.​ராபர்ட் தலைவர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிலரை பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் கூறியபடி பள்ளிக் கல்வித் துறை செயலரையோ அல்லது முதல்வரின் தனிச் செயலரையோ பார்க்க வைக்கவில்லை. மாறாக, காவல் ஆணையரை சந்திக்க வைத்துள்ளனர். நிர்வாகிகளின் செல்போன்களைக் கூட வாங்கி வைத்துள்ளனர். நீண்ட வாக்குவாதத்துக்குப் பின்னரே செல்போன்களை வழங்கியுள்ளனர்.

எங்களது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் ‘சம வேலைக்கு சம ஊதியம்’. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாநில ஜிடிபி இரட்டை இலக்கம் என்று பெருமை பேசும் அரசு இந்தியாவிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியத்தைத் தருவது ஏன்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தருவது இருக்கட்டும், இங்கே மாநிலத்துக்குள்ளேயே சமமான ஊதியம் இல்லையே? இந்த முறை நாங்கள் எங்கள் போராட்டத்துக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

தேர்தல் வரவிருக்கும் சூழலில் எங்களின் கோரிக்கைகளை ஏற்கப்படும் என்று நம்புகிறோம். எங்களுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம். பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் பள்ளிகள் திறந்தபின்னரும் கூட எங்களின் போராட்டம் நீடிக்கும்” என்றார்.

மூத்த சங்க நிர்வாகியின் கருத்து: இதற்கிடையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மூத்த சங்கம் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “1.6.2009-க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியநிலை PB1 (பே பேண்ட் - ஊதியக் கூட்டு), GP (கிரேட் பே - தர ஊதியம்) 2800.

31.12.2015 வரை இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியநிலை PB1, GP 2800.

1.1.2016-க்கு பின்னர் தற்போது வரை இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியநிலை PB1, GP 2800-க்கு 7-வது ஊதியக் குழுவில் வழங்கப்பட்ட Level-10.

இதில் மூத்தோர்கள் இளையோர்கள் என அனைவருக்குமே பாதிப்பு உள்ளது.

6-வது ஊதியக்குழுவில் நமது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியநிலை PB2, GP 4200 வழங்காமல் உள்ளதே இன்று வரை உள்ள ஊதிய முரண்பாடுக்கு காரணம். தொடர்ந்து தற்போது நடைமுறையில் உள்ள 7-வது ஊதியக் குழுவிலும் Level-11 வழங்கப்படாமல் தொடர்வதே காரணம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் PB2, 9300+GP 4200 என்ற ஊதிய நிலையும், தொடர்ந்து 1.1.2016 முதல் Level-11-ம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும்.

இதுதான் எங்களின் கோரிக்கை. தற்போது எஸ்எஸ்டிஏ அமைப்பு வெறும் 19,000 இடைநிலை ஆசிரியர்களுக்காகப் போராடுகிறது. அதுவும், விடுமுறை காலத்தில் மட்டும் போராடுகிறது. சென்னையில் மட்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதை விட மாநிலம் முழுவதும் ஒற்றுமையாகப் போராட வேண்டும். தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார்.

போராட்டங்கள் ஒருபுறம் வலுப்பெற, அரசு தூய்மைப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியம் கோரி போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்று அனைவரின் கோரிக்கைகளுக்கும் என்ன மாதிரியான நடவடிக்கையை அரசு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT