சென்னை: முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அவரின் 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர் ஆர்.சமன். அவரது மறைவுக்குப் பிறகு, சமனின் இரண்டாவது மனைவியான தமிழரசி, குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.
சமன் தனது முதல் மனைவி நளினியை விவாகரத்து செய்யாமல், இரண்டாது திருமணம் செய்து கொண்டதால் தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என அரசு மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், சமன் - நளினி பரஸ்பரம் பிரிந்து கொள்வதாக ஒப்பந்தம் செய்து பிரிந்துள்ளனர், அதை சட்டப்படியான விவாகரத்தாக கருத முடியாது. அதன் அடிப்படையில், சமன் - தமிழரசி திருமணமும் செல்லத்தக்கதல்ல. எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்க தமிழரசிக்கு உரிமையில்லை.
மேலும், சட்டப்படி திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்களைத் தான் விதவையாக கருத முடியும், எனக் கூறி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான தமிழரசி ஏற்கெனவே அதற்கான ஓய்வூதியத்தைப் பெற்று வருவதையும் நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.