அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 16 தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், தற்போது ஆற்றி வரும் தேர்தல் பணிகள் மற்றும் 'விடியா ஆட்சி: உங்கள் வீட்டு பில்-லே சாட்சி' பிரச்சாரம் எத்தனை வீடுகளை சென்றடைந்தது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக சார்பில் 3 கட்டங்களாக 16 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான துண்டு பிரசுர மாதிரியும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ‘விடியா ஆட்சி: உங்கள் வீட்டு பில்-லே சாட்சி' பிரசாரத்தையும் தீவிரப்படுத்துங்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் தொடர்பாகவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி பண பலம், அதிகார பலத்தை பிரயோகிக்கும். அதை அதிமுகவினர் அனுமதிக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விஜய் ஒரு கை தேர்ந்த நடிகர். அவர் ஒருமுறையாவது பத்திரிகையாளரை சந்திக்க வேண்டும். எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே அவரை பார்க்க வேண்டும். விஜய் எங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார். அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது" என்றார்.
இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. அதிமுக சார்பில் 2 வேட்பாளர்களை நிறுத்த முடியும். இப்போது எம்.பி. பதவி காலத்தை நிறைவு செய்யும் தம்பிதுரை, தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கட்சியின் 2026 தேர்தல் நலன் கருதி, ஓபிஎஸ் அதிமுகவில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப, அவரது முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், தம்பிதுரை, பாஜக மூலமாக அழுத்தம் தருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளராக தம்பிதுரையை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்றிரவு அறிவித்தார். இன்னொரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அறிவித்துள்ளது. அந்த இடத்தில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.