திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் உள்வாங்கி காணப்பட்ட கடல்நீர்.

 
தமிழகம்

திருச்செந்தூரில் கடல்நீர் உள்வாங்கியது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: பருவநிலை மாற்றம் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் நீர் உள்வாங்குவதும் பின்பு சகஜ நிலைக்கு திரும்புவதும் நிகழ்கிறது. அவ்வப்போது கடல் சீற்றம் அதிகமாகவும் காணப்படுகிறது. குறிப்பாக அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தை ஒட்டிய முந்தைய மற்றும் பிந்தைய சில நாட்கள் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நேற்று காலை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் வைத்து நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். எனினும், எந்தவித அச்சமும் இன்றி வழக்கம் போல் கடலில் அனைவரும் புனித நீராடினர். சில பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசிப் படர்ந்த பாறைகளின் மீது ஏறி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை போலீஸார் மற்றும் கோயில் பாதுகாவலர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT