சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது படிவம்-6 உள்ளிட்டவற்றில் பல்வேறு நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது முந்தைய முடிவில் இருந்து பின்வாங்கியது சந்தேகங்களை எழுப்புகிறது. எஸ்ஐஆர் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பல மாநிலங்களில், கோடிக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அந்த மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்த பின்னர் தற்போது தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்பப் பெறுவது, குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவது போன்றது.
மேலும், உச்ச நீதிமன்றமும் இத்தகைய கட்டாயங்களை அங்கீகரிக்காத நிலையில், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோனவர்கள் யார் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.