நெல்லை முபாரக்
திருநெல்வேலி: திமுக கூட்டணியில் போட்டியிட 3 இடங்களை கேட்டுள்ளோம் என்றும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக எந்த நிர்பந்தத்தையும் எந்த கட்சிக்கும் கொடுக்கவில்லை என்றும் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக கூட்டணியில் எங்களது கட்சிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 3 தொகுதிகள் வேண்டுமென கேட்டுள்ளோம். எண்ணிக்கையை தீர்மானித்த பின்னர், தொகுதி என்ன என்பதை திமுக குழுவுடன் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவை திரும்பி பார்க்கும் மாபெரும் வெற்றியை மே 4-ம் தேதி திமுக கூட்டணி பெறும். 2 அல்லது 3 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த முழு விவரத்தை அறிவிப்போம்.
நான் போட்டியிடுவது உள்ளிட்ட எந்த விஷயமும் தீர்மானிக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் எங்கள் கட்சி போட்டிடும் என நாங்களாக தான் சொல்லி உள்ளோம். எங்கள் செயற்குழு கூடி முடிவெடுத்து இந்த முடிவை சொல்லி உள்ளோம்.
எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நிர்பந்தத்தையும் திமுக கொடுக்கவில்லை. கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் அவ்வாறு திமுக நிர்பந்தத்தை கொடுக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் இப்போது இருப்பதைப்போல், அதுதொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். டெல்லி உத்தரவின்பேரில் அதிமுக முடிவுகளை எடுக்கிறது என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.
நாங்கள்தான் கூட்டணியின் தலைவர் என அதிமுக சொல்லும் நிலையில், இடங்களை பெறுவதற்கு டெல்லியில் 2 மணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. அதிமுக கூட்டணியை காத்துக் கிடந்துதான் இறுதி செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானமாக நாங்கள் கருதுகிறோம்.
திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. 17-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இது வெற்றி கூட்டணி. ஒவ்வொருவரும் பரஸ்பரமாக அவர்களது உரிமை குறித்து கேட்கத்தான் செய்வார்கள். சகோதர மனப்பான்மையுடன் திமுக பேசி தீர்க்கிறது.
தேர்தலுக்கு இன்னும் அதிகமாக நேரம் உள்ளது. எங்கள் கூட்டணியில் குழப்பம் உள்ளதாக எதிர்க்கட்சிகள்தான் தவறாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி செயல்படுகிறது.
விஜய் வந்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், சாதாரண மக்கள் கூட அவர் மீது நம்பிக்கையை தற்போது இழந்து விட்டார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையில்கூட குரல் எழுப்ப முடியாதவர், மக்களுக்கான பிரச்சினையில் எப்படி குரல் எழுப்புவார்?
விஜய்யின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும் சந்தேகத்தையும் சஸ்பென்ஸை எழுப்புகிறது. இப்தார் நோன்பில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுகிறார். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனமாக இருந்தார்” என்று அவர் தெரிவித்தார்.