கும்பகோணம்: பாபநாசம் வட்டம் மருத்துவக்குடியில் தவெக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயமடைந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருத்துவக்குடியில், தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் பதவி நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. ஆதனூர், மருத்துவக்குடி, நாககுடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நடைபெற்ற தவெகவினர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கலந்து கொண்ட க.விஜய்(40) என்பவர், பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வரும் தனக்கு கிளைச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதே வேளையில், அண்மையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயகாந்த் என்பவர், அந்தப் பதவி தனக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதில், பலத்த காயமடைந்த மு.ஷேசாத்திரி (28), இவரது தாயார் இந்திராணி (50), ரா.சிவா (18), ச.மாலதி (34), ச.விஜயா (50), கிருஷ்ணவேணி (54) ஆகிய 6 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மோதல் தொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.