தமிழகம்

பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்தபோது பழனிசாமி, வேலுமணி ஆதரவாளர்கள் கைகலப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் கடந்த 15-ம் தேதி காலமானார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திப்பம்பட்டியில் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டு நேற்று வந்தார். அங்கு சரஸ்வதி அம்மாள் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.ம.வேலுச்சாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்எஸ்என் நடராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் ‘துரோகி’ என கூச்சலிட்டனர். அவர்களை அதிமுக நிர்வாகிகள் அமைதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தி விட்டு, ஜெயராமனிடம் வீட்டுக்குள் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வேலுமணி, பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ தாமோதரன் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர்.

SCROLL FOR NEXT