சென்னை: விஜய் வருகையால் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலுக்கு இடையே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தவெக தலைவர் விஜய், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு நேற்று காலை 8:30 மணி அளவில் வந்தார். அப்போது, வாக்குச்சாவடியின் நுழைவுவாயிலில் திரண்டிருந்த தொண்டர்கள், பொதுமக்களால் கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், வாக்காளர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தலின் தூண் கம்புகள் சரிந்து விழுந்தன. பந்தலின் கீழ் நின்றிருந்த வாக்காளர்கள் அச்சமடைந்து விலகி ஓடினர். இதற்கிடையே, விஜய்யை போலீஸார் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
விஜய் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த வளாகத்தில் இருந்த 2 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சுமார் 45 நிமிடங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், வரிசையில் நின்றிருந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில், வாக்கை செலுத்திய விஜய், விரலில் இடப்பட்ட அடையாள மையை காண்பித்தபடியே வெளியே வந்தார்.
அப்போதும், கடும் கூட்ட நெரிசல் இருந்ததால், போலீஸார் அவரை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். அதில், ஒரு பெண் போலீஸாரின் தொப்பி கீழே விழுந்தது. கூட்டத்திலும் அதை கவனித்த விஜய், உடனடியாக தொப்பியை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். விஜய் சென்ற பிறகு, வாக்குப்பதிவு மீண்டும் அமைதியாக நடைபெற்றது.