திருவாரூர்: புத்தகத் திருவிழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த அரசுப் பேருந்து சாலையில் பழுதாகி நின்றதால், திருவாரூரில் மாணவர்கள் பேருந்தை தள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவாரூர் மாவட்ட 4-வது புத்தகத் திருவிழா பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவுக்கு, மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் பள்ளிகளில் கொண்டு சென்று விடப்படுகின்றனர்.
இந்நிலையில், புத்தகத் திருவிழாவுக்கு கடந்த 9-ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தில் வந்து புத்தகக் காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பச் சென்றபோது, அரசுப் பேருந்து சிறிது தூரத்தில் பவித்திர மாணிக்கம் பகுதியில் பழுதாகி சாலையோரத்தில் நின்றுள்ளது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் அந்தப் பேருந்தை சிறிது தூரம் தள்ளிச் சென்றும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், புத்தகத் திருவிழாவுக்கு அனுப்பும் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அனுப்ப வேண்டும் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.