உயிரிழந்த மாணவர் அகிலன்
கோவை: கோவையில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பீளமேடு துரைசாமி லே-அவுட் 5-வது வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் - கவுசல்யா தேவி தம்பதி. இவர்களுக்கு 16 வயதில் அகிலன் என்ற மகன் இருந்தார். அகிலன் பீளமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி மாணவர் அகிலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார், சக மாணவர்கள் இருவர் உள்ளிட்டோர் சாதிய கண்ணோட்டத்தில் மாணவரை அணுகியதால், மனமுடைந்த அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அருண்குமார், விஜயகுமார், 2 மாணவர்கள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இரு மாணவர்களையம் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என அகிலனின் பெற்றோர், குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகிலனின் பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோர் தெற்கு தாலுகா அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அகிலன் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையை கோவை மாநகர் பீளமேடு போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் குழு நிர்வாகிகளின் சார்பில், மாநகர காவல் ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதியிடம் இன்று (அக்.26) மனு அளித்தனர்.
இந்நிலையில், அகிலன் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இன்று (அக்.26) மதியம் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘அகிலன் தற்கொலை தொடர்பாக பீளமேடு போலீஸார் பதிந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு உடனடியாக மாற்றப்படுகிறது. மேற்கண்ட வழக்கு தொடர்பான அசல் கோப்புகள், விசாரணை ஆவணங்களை உடனடியாக சிபிசிஐடி டிஜிபி வசம், மாநகர காவல் ஆணையர் ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி டிஜிபி, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு உரிய விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணையை தொடங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அகிலனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.
தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதா? அல்லது தொடர்வதா என்பதை ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும் என போராட்டக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.