புதுடெல்லி: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குதிரை பேர முறைகேடு புகார்கள் மீது சிபிஐ விசாரணை கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்ட தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற செய்யும் வகையில் ஆதரவளித்த கட்சிகளுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தொகையும், 1000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒப்பந்தங்களுக்கான உறுதியும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அமுமுக எம்எல்ஏ காமராஜும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான பிரிவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதுபோன்ற குதிரைபேர புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முறைகேடு புகார்களை சிபிஐ விசாரித்து முடிக்கும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி. மோகனா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.ஆர். ஜெய்சுகின் ஆஜராகி, “ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும் கூட ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. கிழக்கு இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் இதுபோன்ற குதிரை பேரம் நடைபெறுகிறது.
வசதியை செய்து தருவது யார்? - எம்எல்ஏக்கள் தனி விமானத்தில் செல்கின்றனர். அவர்களுக்கு யார் இந்த வசதியை செய்து தருவது? தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஊடகங்களையும் எம்எல்ஏக்களையும் அழைத்து தீர்மான கடிதத்தை வழங்கியதுடன், அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அறிவித்தார். ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே மற்றொரு கட்சியில் அவர்கள் இணைகிறார்கள். இது தெளிவான குதிரை பேரம். நமது நாட்டில் ஆளுங் கட்சிகள் இருவகையில் ஜனநாயக மாண்புகளை சீரழிக்கின்றன.
இது போன்ற குதிரை பேர விவகாரத்தில் ஜனநாயகத்தை காக்கும் நோக்கில் நீதிமன்றம் தலையிட வேண்டும்”என்று வாதிட்டார். “மனுதாரர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை தள்ளுபடி செய்தால் ஏமாற்றத்துக்கும் உள்ளாக மாட்டார். ஏராளமான பொதுநல மனுக்களை தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்” என்று தலைமை நீதிபதி குறிப்பிட்ட போது, “இது ரிட் மனு” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், வாதங்களை விரிவாக கேட்டோம். தெளிவில்லாத, வெறுமனே சுமத்தப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய முகாந்திரம் எழவில்லை என்று குறிப்பிட்டு ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.