புதுடெல்லி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான இடத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நிலத்தை வாங்கியவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தின் பத்திரப் பதிவுக்கு அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அக்கோயில் செயல் அலுவலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கில் கோயிலின் தக்காரை சேர்க்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மடத்தின் சொத்துகள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ள நிலையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது. எனவே பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மட நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிவிஷன் அமர்வு, நிலத்தை பதிவு செய்வதற்கு முன்பு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்டிருக்க வேண்டும். அதன் பின்னரே பத்திர பதிவுக்கு அனுமதி கோரியிருக்க வேண்டும், சொத்து தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை சார் பதிவாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் தெரிவித்து இருக்க வேண்டும்.
இவற்றை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது, மேலும் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்காமல், நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்காமல் சார் பதிவாளர் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இதனால் இந்த பத்திரப்பதிவு செல்லாது என்றும், முழுமையான தகவல்களையும் தெரிவிக்காமல் தனி நீதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதோடு, உத்தரவின் அடிப்படையில் பழநி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை டிவிஷன் அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, நிலத்தை வாங்கிய சேதுபதி மற்றும் வெள்ளத்துரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் கோயில் சொத்து தானே, அப்படி இருக்கும்போது எவ்வாறு பத்திர பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, இது பல தலைமுறைகளாக தனியார் பராமரப்பில் உள்ளதாகவும், பழநி கோயிலுக்கு சொந்தமான நிலம் அல்ல என்றும் ஒரு தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் எனவும் மேலும் ஒரு தனி நபரிடமிருந்துதான் இந்த நிலத்தை வாங்கியதாகவும் தெரிவித்தார்.
மேலும், சொத்து தொடர்பான உரிமையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது, அவ்வாறு உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்றம் எப்படி இவ்வாறான உத்தரவை பிறப்பிக்க முடியும்? எனவே பத்திரப்பதிவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.அதற்கு பதிலளித்து பேசிய பழநி கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.சத்யநாராயணன் மற்றும் வழக்கறிஞர் லட்சுமணன் ராஜா ஆகியோர், ‘‘இந்த நிலம் தொடர்பாக ஏற்கெனவே தொடரப் பட்ட உரிமையியல் வழக்கில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் நபர்கள் விசாரணைக்கு ஆஜராகாததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் அந்த வழக்கை மீட்டெடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது பழநி மாவட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது, எனவே நிலம் உரிமை கோருவது தொடர்பாக அந்த நீதிமன்றத்தை தான் அணுக முடியும். அதேவேளையில் நிலத்தை விற்ற முருகதாசின் தந்தை முன்பு தொடர்ந்த வழக்கில் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காத நிலையில், நிலத்தை எப்படி விற்க முடியும்? இந்த கருத்தின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது.
எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது’’ என்று வாதிட்டனர். இதைத்தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், நிலம் தொடர்பாக பழநி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கில் சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோரை சேர்ப்பதற்கு உத்தரவிடுவதாகவும், அதே வேளையில் பத்திரப்பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது உரிமையியல் வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.