உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
புதுடெல்லி / சென்னை: தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கான விதிகளை வகுத்து ஆக. 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடிக்க சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என கடந்த 2023-ல் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுருக்குமடி வலைக்கு மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்க கூடுதல் கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரியும் மீனவர்கள் அமைப்பு சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில்கூட சுருக்குமடி வலையில் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டவில்லை, எனவே சுருக்கு மடிவலை விவகாரத்தில் தமிழக அரசு மீனவர்களின் கோரிக்கைகளை செவிமெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிபுணர் குழு அறிக்கை என்பது மேற்கு கடற்கரை தொடர்பானது, தமிழகம் கிழக்கு கடற்கரையில் உள்ளது, மேலும் மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதி வழியாகச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதித்தால் மீன்வளம் பாதிக்கும். சுற்றுச்சூழலுக்கும் பவளப்பாறைகள், சிறு சிறு மீன் குஞ்சுகளும் கடுமையாக பாதிக்கப்படும். எனவேதான் சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது என தெரிவித்தது.
மேலும் கடற்கரையில் இருந்து கடலுக்குள்ளாக 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான நீர்ப்பரப்பு மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்த கடல் பரப்பை தாண்டி தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை கண்காணிப்பது கடினம் எனவே சுருக்கும்படி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க இயலாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு விதிகளை வகுத்து ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.