சென்னை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி சவுக்கு மீடியா செயல் அதிகாரியான பிரபல யூ டியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், என்னைக் கொலை செய்வ தற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளார்.
எனக்கு டெல்லியில் இருந்து உளவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.
கடந்த ஆண்டு செப்டம்பரிலும் என்னை கொலை செய்வதற்காக தென் தமிழகத்தில் இருந்து ஒரு கூலிப்படை இதேபோல் ஏவப்பட்டது. அப்போதும் டெல்லியில் இருந்து தகவல் வந்தது.
அதன் பின்னர், பொறுப்பு டிஜிபி-யாக இருந்த வெங்கடராமனை சந்தித்து புகார் அளித்தேன். அதன் பிறகே கொலை திட்டம் கைவிடப்பட்டது.
இந்தியாவில் யாருக்கும் நடக்காத கொடுமைகள் எல்லாம் எனக்கு நடந்துள்ளது. எனவே, எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சவுக்கு சங்கர் தெரிவித்தார்.