தாராபுரம்: தேர்தல் செலவு தொடர்பாக தான் பேசியதாக வரும் வீடியோ உண்மையானதல்ல என்று தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா மறுத்துள்ளார்.
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய பழைய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் மற்றொரு நபருடன் உரையாடும் சத்யபாமா, “சென்ற தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன். ஆனால் ஒரு பைசா கூட திரும்பி வரவில்லை. எடப்பாடி பத்து பைசா கூட எடுக்க மாட்டார். என்னுடைய நிலைமை இப்போது இங்கு வந்து நிற்கிறது” என்று மிகவும் ஆதங்கத்துடன் பேசுவதுபோல் உள்ளது. தேர்தல் செலவு குறித்து அவர் பகிரங்கமாகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இந்த வீடியோவை எதிர்க்கட்சிகள் வெளியிடவில்லை என்றும், தவெக கட்சியைச் சேர்ந்த நபர்களே திட்டமிட்டு வாட்ஸ்அப் குழுக்களில் கசியவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சத்யபாமா, “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள். இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது” என்றார்.