சென்னை: இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரிவினராக போராட்டங்களைத் தொடங்கும் நிலையில், அவற்றுக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு முறையே ரூ.7,700, ரூ.4,100, ரூ.3,000 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரை முழுநேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; மாதம் ரூ.2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படும் நிலையில் அதை ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை தான் சத்துணவு பணியாளர்கள் முன்வைக்கும் 13 கோரிக்கைகளில் முதன்மையானவையாகும். இந்தக் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
சத்துணவு அமைப்பாளர்கள் பல ஆண்டுகளாக ஏற்கப்படாத தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர். வேலை நிறுத்தத்திற்கான காரணங்களை விளக்கி கடந்த 12ம் தேதி மாநாடுகளையும் நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், அவர்களை ஆட்சியாளர்கள் எப்போதோ அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்க முடியும்.
ஆனால், அதை செய்யாத அரசு, கடந்த 14-ம் தேதி தான் சமூக நலத்துறை செயலாளர் மூலம் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தியது. இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை செயலாளருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படாத நிலையில், சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து, முடிவெடுப்பதற்கு 14 நாள் காலக்கெடு கோரியிருந்தார். ஆனால், இப்போது மேலும் ஒரு வாரக் காலக்கெடு தேவை என சமூக நலத்துறை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தான், இது ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொண்ட சத்துணவுப் பணியாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
சத்துணவுப் பணியாளர்களின் இந்த போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு முழுவதும் 43,038 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும். அரசு பள்ளிகளில் பயிலும், குறிப்பாக சத்துணவுத் திட்டப் பயனாளிகளாக சேர்ந்திருக்கும் குழந்தைகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சத்துணவுத் திட்டத்தை நம்பியுள்ள அவர்களுக்கு உணவு கிடைக்காவிட்டால் அது அவர்களின் கல்வியையும், உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இப்போது சத்துணவுப் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. ஆனாலும் கூட இந்த போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கோ, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை.
சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.