சிவகங்கையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் குரு.முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக்.

 
தமிழகம்

“சசிகலா வருகை அரசியலை புரட்டி போட்டுள்ளது” - நடிகர் கார்த்திக் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சசிகலா வருகை தமிழக அரசியலை புரட்டிப் போட்டுள்ளது என, மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் குரு.முருகானந்தத்தை ஆதரித்து, சிவகங்கை, இடையமேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:நான் யாரையும் வசைபாட வரவில்லை. ‘அதர்மம் தலைதூக்கும் போது நான் அவதரிப்பேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்லியுள்ளார். அதன்படி, அதர்மம், துரோகம் தலைதூக்கியதால் நியாயம் கேட்க சசிகலா வந்துள்ளார். நானும் அவருக்கு துணையாக வந்துள்ளேன். உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அவரை ஆதரியுங்கள்.

அவர் தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக களத்தில் இறங்கியுள்ளார். சசிகலா வருகை அரசியலை புரட்டிப் போட்டுள்ளது. அவருக்கு பழி வாங்கும் எண்ணம் கிடையாது; நியாயத்துக்காக போராடுகிறார்.

சசிகலா ஒருவருக்கு பதவி கொடுக்கிறார், அவர் சசிகலாவை கைவிடுகிறார். இது மேலோட்டமாக அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அவர் எவ்வளவு துயரப்பட்டுள்ளார் என்பது அவரை சந்தித்த பிறகுதான் தெரிந்தது.

சிலர் தமிழ், தமிழர் உரிமை என்று பேசுகின்றனர். ஆனால், தமிழை அழிக்கின்றனர். அவர்களிடமிருந்து தமிழை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT