சென்னை / சேலம்: தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் (தவாக) சசிகலாவின் அஇபுமமுக கட்சியும் பல்வேறு தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய தவாக நெய்வேலி தொகுதியில் 11,381 ஓட்டுகளை பெற்று 10,962 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைய காரணமாக அமைந்தது. குறிஞ்சிப்பாடியில் 7,113 ஓட்டுகளை பிரித்ததில் அதிமுக 7,589 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
வேப்பனஹள்ளியில் 871 ஓட்டுகளை பெற்றநிலையில், இங்கு அதிமுக 138 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. திருக்கோவிலூரில் தவாக வேட்பாளர் 312 ஓட்டுகள் பெற்றாலும், இங்கு தவெக வேட்பாளர் 285 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் வெற்றியை இழந்தார்.
மொடக்குறிச்சியில் தவாக வேட்பாளர் 2,239 ஓட்டுகள் பெற்றநிலையில், இங்கு பாஜக வேட்பாளர் 2,440 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
இதுபோல, பரமத்திவேலூர், கம்பம், கன்னியாகுமரியில் திமுக வேட்பாளர்கள், கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர், போளூரில் தேமுதிக வேட்பாளர் உள்ளிட்டோர் தவாக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளால் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
இதேபோல் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கு இடையே வித்தியாசம் 20,502 வாக்குகள். இதில், சசிகலா கட்சி 40,422 வாக்குகள் பெற்றதால் அதிமுக தோல்வி அடைந்தது. உசிலம்பட்டியில் தவெக வேட்பாளர் அதிமுகவை 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் சசிகலா கட்சி வேட்பாளர் அய்யப்பன் 16,620 வாக்குகளை பிரித்ததால், அதிமுக தோல்வியைத் தழுவியது.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் 58,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக 57,361 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும் அதிமுக வேட்பாளர் பெ.பெரியபுள்ளான் 56,744 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் பெற்றனர். இதில் சசிகலா கட்சி வேட்பாளர் சோனியா காந்தி 2,628 வாக்குகளை பிரித்ததால், அதிமுக தோல்வியைத் தழுவி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு பின்னடவை சந்தித்தது.
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகள் பெற்றார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் 62,060 வாக்குகள் பெற்று 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு அஇபுமமுக 11,602 வாக்குகளை பிரித்ததால், நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார்.