தமிழகம்

சசிகலா கட்சியில் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வீரப்பன், அயோத்திக்குப்பம் வீரமணி ஆகியோரின் என்கவுன்டரில் முக்கிய பங்காற்றிய போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை சசிகலா தொடங்கியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வந்த அவர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து, கூட்டணி ஒப்பந்தமும் செய்தார்.

          

இதற்கிடையில் மார்ச் 18 முதல் 23-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்: சங்கரன்கோவில் தொகுதியில் வசந்தி முருகன், மதுரை மத்திய தொகுதியில் ப.சக்கரவர்த்தி, திருப்பரங்குன்றத்தில் த.தனபாண்டியன், திருமங்கலத்தில் ப.ஜீவிதா நாச்சியார், மேலூரில் பா.சோனியாகாந்தி, மானாமதுரையில் க.திலக்ராஜ், பரமக்குடியில் அமிர்தா பாலுசாமி, ராஜபாளையத்தில் அ.அரிஷ், முதுகுளத்தூரில் ராம்குமார் பாண்டியன், தென்காசியில் மு.பூசத்துரை, சிவகங்கையில் பிரபு, குளச்சலில் எஸ்.கிறைஸ்ட் மில்லர், சிவகாசியில் நேஷனல் மு.கணேசன், திண்டுக்கல்லில் பி.ராமுத்தேவர், மயிலாடுதுறையில் நா.சுதாகர், மன்னார்குடியில் சு.ராசுப்பிள்ளை, ஸ்ரீரங்கத்தில் அ.விஜய், திட்டக்குடியில் இரா.பழனிவேல், ஸ்ரீபெரும்புதூரில் புருஷோத்தமன், திருச்சி கிழக்கில் செ.நந்தகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சந்தனக்கடத்தல் வீரப்பன், அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்டரில் முக்கிய பங்கு வகித்த, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ச.வெள்ளத்துரைக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர், ஆலங்குளம் தொகுதிகளும், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனர் அண்ணா சரவணனுக்கு நன்னிலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT