சசிகலா 
தமிழகம்

“திமுக அரசுக்கு முடிவு கட்டுவதே எங்கள் வேலை” - புத்தாண்டில் சசிகலா சபதம்

செய்திப்பிரிவு

போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டையொட்டி, சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி வந்ததிலிருந்து தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள், வட மாநில இளைஞரை போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அடுத்த சில தினங்களில் அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரியை சிறுவர்கள் தாக்கியுள்ளனர். திருப்பூரில் ஒரு கோயில் திருவிழாவில் போதையில் ஒரு இளைஞர் கத்தியை காட்டி போலீஸாரையே மிரட்டியுள்ளார். காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை.

தமிழகத்தில் 1.75 கோடி பேர் தினமும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். அவர்கள் பயணிக்க ஏதுவாக 10,900 பேருந்துகள் இருக்க வேண்டும். 2011-2016 அதிமுக ஆட்சியில் 10 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. திமுக ஆட்சியில் எத்தனை பேருந்துகள் வாங்கினார்கள் என்ற விவரத்தையே வெளியிடவில்லை. விரைவுப் பேருந்துகள், 3 லட்சம் கி.மீ ஓட வேண்டும். இல்லாவிட்டால் 7 ஆண்டுகளுக்கு இயக்கலாம். மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் 6 லட்சம்கி.மீ அல்லது 6 ஆண்டுகள் இயக்கப்பட வேண்டும். அதன் பிறகு, புதிய பேருந்துகளைத்தான் இயக்க வேண்டும். இந்த விதிகளை ஜெயலலிதா சிறப்பாக கடைபிடித்து வந்தார்.

ஆனால் திமுக அரசு, விரைவுப் பேருந்துகளை 9 லட்சம் கி.மீ அல்லது 12 ஆண்டுகள் இயக்கும் வகையில் விதிகளை திருத்தியது.ஆள் பற்றாக்குறை காரணமாக போதிய ஓட்டுநர்களையும் நியமிக்கவில்லை. இருக்கும் ஓட்டுநர்களை ஓய்வின்றி பணியாற்ற அறிவுறுத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. கடலூரில் கூட அண்மையில் அரசுப் பேருந்து டயர் வெடித்து, சாலையில் சென்ற கார்கள் மீது போதி, 9 பேர் உயிரிழந்தனர். அரசுப் பேருந்துகளில் ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அந்த வருவாயில் கூட புதிய பேருந்துகளை வாங்கவில்லை. அந்த அளவுக்கு மோசமான நிர்வாகம் நடக்கிறது. அதிக அளவில் கடன் வாங்கி, மாதம் ரூ.6 ஆயிரம் கோடி வட்டி கட்டுகின்றனர்.

இப்போது தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக அரசில் எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. இந்த நிலை மாற ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும். தேர்தல் நெருக்கத்தில், அதிமுக-வில் நிலவும் எல்லா பிரச்சினைகளும் தீரும் என நம்புகிறேன்.

தமிழக எம்பி-க்கள் தமிழக நலனுக்காக பேசுவதே இல்லை. அரசியல் மட்டுமே பேசுகின்றனர். மத்திய அரசுடன் சுமுகமான போக்கை கடைபிடித்து நிதியை பெற்று, தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாமல், மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர். இதனால் வரவேண்டிய நிதியும் வருவதில்லை

எனவே, இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக சரியான பாடத்தை திமுக-வுக்கு கற்பித்தால் தான் தமிழகத்தில் வளர்ச்சியை பார்க்க முடியும். அது மக்கள் கையில் தான் உள்ளது. போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT