தமிழகம்

“திமுக ஆட்சியை ஓட ஓட விரட்டுவதுதான் எங்கள் வேலை” - சசிகலா பிரகடனம்

செய்திப்பிரிவு

எம்ஜிஆர் தொண்டர் ஒருவர் தொடங்கிய ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கும் சசிகலா, தமிழகம், புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் தங்கள் கட்சி போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக-வின் பொதுச்செயலாளர் தான் தான் எனக் கூறி சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், கடந்த பிப்.24-ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா. இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று சசிகலா தங்களது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் வெளியிட்டார்.

          

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தக் கட்சிக்கு 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்சி வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிடுகிறது. ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினேன்.

திமுக என்ற தீயசக்தியை வேரறுத்து தமிழக மக்களை காக்க எம்ஜிஆர் ஒரு இயக்கம் கண்டார். தமிழக மக்களுக்காக, தொண்டர்களுக்காக நல்லது செய்ய முடியும் என்பதை செய்து காட்டினார்.

அவரைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றத்துக்கு எண்ணற்றத் திட்டங்களை அளித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தீயசக்தி திமுக மக்களை கசக்கிப் பிழிந்து வருகிறது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், இதற்கெல்லாம் முடிவு கட்டவே, ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினேன்.

எம்ஜிஆர், தனது தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அந்தக் கட்சியை நடத்தினார். அதேபோல், எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பற்றுகொண்ட ஒரு தொண்டர் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.

இந்தக் கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவோம். நான் மக்களோடு இருப்பேன்.

அதற்கு இந்த சின்னமே சான்று. ‘தனிமரம் தோப்பாகாது' என்ற பழமொழிக்கேற்ப தோப்பாக வந்திருக்கிறோம். ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். எப்போதும் மக்களுக்காக, மக்கள் கட்சியாக செயல்படுவோம்.

எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமையும். தமிழக மக்கள் நியாயத்தை பார்ப்பார்கள், முதுகில் குத்தமாட்டார்கள். நல்ல மனம் படைத்தவர்கள். நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

திமுக அரசு மக்களின் பிரச்சினைகளை சரியாகத் தீர்க்கவில்லை. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைப்பேன். இந்த ஆட்சியில் 5 வயது பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை ஓட ஓட விரட்டுவது தான் எங்கள் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT