அமைச்சர் விஜய் பாலாஜி
வேலூர்: வரும் பொங்கல் பண்டிகைக்கு வெள்ளி ஜரிகை வைத்தது போன்று சேலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
விளையாட்டு துறை சார்ந்த ஒருவரை தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக முதல்வர் தேர்ந்தெடுத்துள்ளார். நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்து வருகிறது.
1.77 கோடி வேட்டி, சேலைகள்
தற்போது தலா 1.77 கோடி எண்ணிக்கையில் வேட்டி, சேலைகளை தயாரிக்க வருவாய்த் துறையில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். சேலைகளை பொறுத்தவரை பெண்களுக்கு பிடித்த மாதிரி வெள்ளி ஜரிகை வைத்தது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பெண்கள் விரும்புவதுபோலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வரும் வழியில் ரயில்வே கேட் உள்ளதால் இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.