பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: ‘தூய்மைப் பணிகளை தனியார்மயப்படுத்தக் கூடாது’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். இது தொழிலாளர்களை நிரந்தர வேலையின்மை, வருமான இழப்பு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தும்.
தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட சமூக மற்றும் பணி பாதுகாப்பு வசதிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், ஊதிய பாதுகாப்பு, உரிமைகள் குறைப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளும் உருவாகக்கூடும். மக்களின் சுகாதாரத்துக்கும், நகரங்களின் தூய்மைக்கும் முக்கிய பங்காற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.
எனவே, மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அத்துடன், தற்போது பணியாற்றிவரும் ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றவும், அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.