தமிழகம்

தென்காசி தொல்லியல் தளத்தில் சங்க கால தொழிற்கூட கட்டமைப்புகள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பகிர்வு

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தென்காசி மலையடிப்பட்டி தொல்லியல் தளத்தில், சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌’ என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌.

தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT