சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

 

படங்கள்; ர.செல்வமுத்துகுமார்

தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

அ.சாதிக் பாட்சா

திருச்சி: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நிகழாண்டு சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்.5 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

          

தேரோடும் வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே ஆடி அசைந்தபடி வலம் வந்த தேர் மாலை 4 மணியளவில் நிலையை அடைந்தது. தேரில் எழுந்தருளி காட்சியளித்த அம்மனை வழிநெடுக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தேர் திருவிழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், அம்மன் வேடம் பூண்டும், கரும்புத் தொட்டில் எடுத்து நடந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

பக்தர்கள் தங்குவதற்கு நிழற்பந்தல், குடிக்க, குளிக்க தண்ணீர் வசதி கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தேர் திருவிழாவுக்காக பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்க காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

சத்திரம், பஞ்சப்பூர், மத்திய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. சித்திரை தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாரயணன் தலைமையில் அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT