திருப்புல்லாணியில் உள்ள உப்பளத்தில் பணிபுரியும் தொழிலாளி.

 
தமிழகம்

ராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி உயர்வு - போதிய விலை இல்லாததால் உப்பள உரிமையாளர்கள் வேதனை

அதிக வெயிலின் தாக்கம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: வெயில் அதிகமாக இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகளவில் இருந்தாலும், போதிய விலை கிடைக்காததால் உப்பள உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்திலும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. உலகில் உப்பு உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் கடல்நீர் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, கோப்பேரிமடம் போன்ற இடங்களில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் உப்பளங்கள் அமைக்கப்பட்டு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் உப்பளம், உப்பு சுத்திகரிப்பு நிலையம், அயோடின் உப்பு தயாரிப்பு நிலையம், நிர்வாக அலுவலகத்துடன் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உணவுக்காகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் என தனித்தனியாக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உப்பு தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அயோடின் கலந்த உணவு உப்பு தயாரிக்கவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகிது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடும் வெயில் அடித்து வருவதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

எனினும், உப்புக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை தமிழக வியாபாரிகள், தொழிற்சாலைகள் அதிகளவில் வாங்கி இருப்பு வைத்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உப்பளத்தில் இருந்து லாரியில் ஏற்றப்படும் உப்பு.

இதுகுறித்து திருப்புல்லாணியில் உள்ள அழகர் சால்ட் பணியாளர் கண்ணன் கூறுகையில், இந்த ஆண்டு அதிக வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு டன் உப்பு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விலை கிடைக்கிறது. இத னால் வருவாய் குறைந்துள்ளது என்று கூறினார்.

SCROLL FOR NEXT