சேலத்​தில் உள்ள வெள்​ளிப்​பட்​டறை​யில் கலைந​யத்​துடன் தயா​ரிக்​கப்​படும் வெள்​ளிக்​கொலுசுகள். (கோப்​புப்​படம்: எஸ். குரு பிர​சாத்)

 
தமிழகம்

வட மாநிலங்களுக்கு இடம் மாறும் சேலம் வெள்ளிக்கொலுசு தொழில்

அரசு கவனம் செலுத்தி முன்னேற்றம் கொண்டுவர வலியுறுத்தல்

எஸ்.விஜயகுமார்

சேலம்: வெள்​ளிக்​கொலுசுத் தொழில், வட மாநிலங்​களுக்கு இடம் மாறும் சூழல் உரு​வாகி வரு​வ​தால், உற்​பத்​தி​யாளர்​கள் கவலை அடைந்​துள்​ளனர். இதன் எதிரொலி​யாக, ஆண்​டு​தோறும் பண்​டிகைக் கால ஆர்​டர்​கள் குறைந்து வரு​வ​தாக அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமி​ழ​கத்​துக்​குப் பெருமை சேர்க்​கும் முக்​கி​யத் தொழில்​களில் ஒன்​றாக சேலம் வெள்​ளிக்​கொலுசு உற்​பத்தி விளங்​கு​கிறது. சேலம் வெள்​ளிக் கொலுசுகள் தரமாக​வும், கைவேலைப்​பாடு​கள் நிறைந்​த​தாக​வும் இருப்​ப​தால், பல்​வேறு மாநிலங்​களுக்​கும் வெளி​நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. சேலத்​தில் சாவித்​திரி, மேன​கா, குஷ்பூ, எஸ்​.செ​யின் ஆகிய பெயர்​களில் கொலுசுகள் தயா​ரிக்​கப்​படு​கின்​றன. மேலும், கால் மெட்​டி, மோதிரம், இடுப்​புச் செயின், குழந்​தைகளுக்​கான கால் தண்டை உள்​ளிட்ட வெள்ளி ஆபரணங்​களும் தயா​ரிக்​கப்​படு​கின்​றன. வெள்ளி ஆபரணங்​கள் என்​றாலே சேலம் என்ற பெரு​மை​யும் உள்​ளது.

தொழி​லா​ளர் பற்​றாக்​குறை​யால், வெள்​ளிக்​கொலுசுத் தொழிலில் வெளி​மாநிலத் தொழி​லா​ளர்​களின் பங்​கேற்பு அதி​கரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், உற்​பத்​தி​யாளர்​களிடையே ஒருங்​கிணைப்பு இல்​லாமை, நவீனமய​மாக்​கல் இல்​லாமை உள்​ளிட்ட காரணங்​களால் வெள்​ளிக்​கொலுசுத் தொழில் சரி​வடைந்​துள்​ளது.

இதுகுறித்​து, சேலம் வெள்​ளிக்​கொலுசு உற்​பத்​தி​யாளர்​கள் கைவினை நலச்​சங்​கத் தலை​வர் ஆனந்​த​ராஜன் கூறிய​தாவது: சேலம் மாநகரைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வெள்​ளிக்​கொலுசுப் பட்​டறை​கள் உள்​ளன. இத்​தொழிலில் நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயனடைந்து வரு​கின்​ற​னர்.

ஒரு வெள்​ளிக்​கொலுசு, வெவ்​வேறு 10 இடங்​களில் படிப்​படி​யாக உரு​வாக்​கப்​பட்டு முழு​மையடைகிறது. மேலும், வெள்​ளி​யின் அதிக மதிப்​பு, தொழி​லா​ளர்​களுக்கு முன்​பணம் வழங்​குதல் உள்​ளிட்ட காரணங்​களால் இத்​தொழிலுக்கு அதிக முதலீடு தேவைப்​படு​கிறது.

இத்​தொழிலில் ஈடு​பட்​டுள்​ளவர்​களிடையே ஒற்​றுமை குறை​வாக உள்​ளது. நவீன இயந்​திரங்​கள் இல்​லாமை, புதிய வடிவ​மைப்​பு​களை உரு​வாக்​கு​வ​தில் ஆர்​வ​மின்மை உள்​ளிட்ட சிக்​கல்​களும் உள்​ளன.

ஆள் பற்​றாக்​குறை​யால் இத்​தொழிலில் வட மாநிலத் தொழி​லா​ளர்​கள் ஈடு​படத் தொடங்​கினர். அவர்​களில் பலர் தொழில் நுணுக்​கங்​களைக் கற்​றுக்​கொண்​டனர். இந்​தச் சூழலை பயன்​படுத்​தி, வெளி மாநிலங்​களில் இருந்து கொலுசு வாங்க வரும் வியா​பாரி​கள், குஜ​ராத், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட தங்​கள் சொந்த மாநிலங்​களி​லேயே அதிக முதலீடு செய்​து, ஒரே கூரை​யின் கீழ் வெள்​ளிக்​கொலுசுகளை உற்​பத்தி செய்து வரு​கின்​ற​னர்.

எனினும், தரத்​தின் அடிப்​படை​யில் சேலம் வெள்​ளிக்​கொலுசுகளுக்கு சந்​தை​யில் அதிக மதிப்பு உள்​ளது. ஆனால், குறைந்த எடை, குறைந்த விலை காரணங்​களால் வட மாநில வெள்​ளிக்​கொலுசுகளுக்​கும் சந்​தை​யில் வரவேற்பு உள்​ளது. இதனால், சேலத்​துக்கு வரும் வெள்​ளிக்​கொலுசு ஆர்​டர்​கள் ஆண்​டு​தோறும் குறைந்து வரு​கின்​றன.

தற்​போது, சேலத்​தில் வெள்​ளிப்​பட்​டறை​களின் எண்​ணிக்கை 7 ஆயிர​மாகக் குறைந்​து​விட்​டது. கடந்த ஆண்டு பண்​டிகைக் காலத்​தில் ஆர்​டர்​கள் 40 சதவீதம் வரை குறைந்த நிலை​யில், நிகழாண்டு மேலும் அதி​க​மாகக் குறைந்​துள்​ளது.

பல பட்​டறை​களுக்கு இது​வரை பண்​டிகைக் கால ஆர்​டர்​கள் வரவில்​லை. எனவே, இடம் மாறும் சேலம் வெள்​ளிக்​கொலுசுத் தொழிலைப் பாது​காக்க உற்​பத்​தி​யாளர்​கள் ஒன்​றிணைந்து முயற்சி மேற்​கொள்ள வேண்​டும். தமிழக அரசும் இத்​தொழிலைப் பாது​காக்​கத் தேவை​யான நடவடிக்​கை​களை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT