ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் அருள்...
அன்புமணியால் பாமக-வுக்கு ஏற்பட்ட சரிவை 2026-ல் ராமதாஸ் சரிசெய்வார் என பாமக (ராமதாஸ்) இணைப் பொதுச்செயலாளர் சேலம் அருள் எம்எல்ஏ தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி, சேலம் மாவட்டத்தில் பாமக (ராமதாஸ்) சார்பில் டிசம்பர் 12-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேட்டூரை அடுத்த மேச்சேரியில் சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் அருள் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாமக தலைவர், நிறுவனர் ராமதாஸ் தான். அப்படி இருக்கையில் அவர் புதியதாக கட்சி ஆரம்பிக்க அவசியமில்லை. பிஹாரில் போட்டியிடத் தான் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தமிழகத்தில் எங்களுக்கே மாம்பழம் சின்னம் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி தேர்தல் கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
போகாத ஊருக்கு வழி சொல்வது போல, அன்புமணி தரப்பு இடஒதுக்கீட்டுக்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே பாமக தலைவராக ராமதாஸைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளன. அன்புமணி நடைபயணம் போனாலும் ஒன்றும் நடக்காது. சேலத்தில் டிசம்பர் 12-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்திமதி தலைமை வகிக்கிறார்.
அன்புமணி தரப்பில் 500 பேருக்கு எம்எல்ஏ சீட்டும், 150 பேருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி கொடுத்துள்ளனர். மேட்டூர் தொகுதிக்கு 5 பேருக்கு உறுதி கொடுத்துள்ள நிலையில், ஊடகப் பிரிவை சேர்ந்தவர் தான் வேட்பாளர் என முடிவுசெய்து வேலை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மேட்டூர் தொகுதி நிர்வாகிகள் அப்செட்டில் உள்ளனர். மேட்டூர், சேலம் மேற்கு தொகுதிக்கான வேட்பாளர்களை ராமதாஸ் தான் அறிவிப்பார். அன்புமணியை பார்த்துயாரும் கட்சிக்கு வரவில்லை. ராமதாஸை பார்த்து தான் வந்துள்ளனர். முடிவுகளை எல்லாம் ராமதாஸ் எடுத்தபோது பாமக-வுக்கு வெற்றியாகத் தான் இருந்தது.
அன்புமணி தலையிட்டு முடிவெடுக்க ஆரம்பித்த பிறகுதான் பாமக-வுக்கு சரிவு ஏற்பட்டது. இந்த சரிவை வரும் 2026-ல் ராமதாஸ் சரி செய்து வெற்றிக் கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.