சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முன்பதிவு செய்த பக்தர்களில் 60 சதவீதம் பேரே தரிசனத்துக்கு வருகின்றனர். எனவே, இதில் முறைகேடு எதுவும் நடைபெற்றுள்ளதா என்று தேசவம் போர்டு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில், தினமும் கூடுதலாக 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜை, கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதற்காக, ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவுகள் மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக கார்த்திகை முதல் தேதியில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால், இந்த ஆண்டு மண்டல காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் குறைந்து பக்தர்கள் நிதானமாக தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இது மனதிருப்தியை ஏற்படுத்தினாலும், முன்பதிவு செய்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் வரை வராதது தேவசம் போர்டு அதிகாரிகளை சந்தேகத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
டிசம்பர் வரை முன்பதிவுகள் முடிந்ததாக, சிவப்பு நிற வண்ணத்தில் குறியீடுகள் காட்டுகின்றன. இதனால், அந்த தேதிகளில் உண்மையிலேயே சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலா ஏஜென்சிகள் முன்பதிவுகளை அதிக அளவில் செய்திருந்தன. அதுபோல, தற்போதும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அத்துடன், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் தினமும் 5 ஆயிரம் பேரை கூடுதலாக அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறியதாவது: கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை கணக்கிட்டு, கூட்ட மேலாண்மையில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், முன்பதிவு செய்தவர்களில் 60 சதவீத பக்தர்களே சபரிமலைக்கு வரும் நிலை உள்ளது. இதனால், தினமும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த தேதியில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரமுடியாத பக்தர்கள் பதிவை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மற்ற பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு கிடைக்கும். வராத பக்தர்களின் ஆதார் எண் உள்ளிட்டவை தனியே எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.