சென்னை: “அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்ததற்காக, மன்னிப்பு கேட்க வேண்டும்” என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகனும், அரசியல் ஆலோசகருமான சபரீசன் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக குறித்து, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பிருந்தே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தவெக நிர்வாகிகள் விமர்சித்து வந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற ஒரே காரணத்துக்காக அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை 2 அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
தனது நேர்மை, பொது சேவை, உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளின் மூலம் தனிப்பட்ட, சமூக, தொழில் ரீதியான வாழ்க்கை ஆகியவற்றில் களங்கமற்ற நற்பெயரை கொண்டுள்ள சபரீசனுக்கு எதிராக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் ஜூன் 25-ம் தேதி நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளன.
எனவே இரு அமைச்சர்களும் தங்களது கருத்துகளை உடனடியாக திரும்பப்பெறுவதுடன், அதே ஊடகங்கள் முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் சபரீசனுக்கு எதிராக கருத்துகளை வெளியிட மாட்டோம் என நிபந்தனையற்ற உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். இவற்றை 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கையை இரு அமைச்சர்களும் சந்திக்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.