விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆர்எஸ்எஸ் சார்பில் அருப்புக்கோட்டையில் காவிக்கொடி பேரணி இன்று நடைபெற்றது. மேல ரதவீதியில் இப்பேரணியை தொழிலதிபர் சங்கரலிங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். விருதுநகர் தொழிலதிபர் ஜவஹர், உலக சுகாதார நிறுவன மருத்துவ ஆலோசகர் ஹரிஹர சுப்பிரமணியன், காரியாபட்டி ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேல ரதவீதியில் தொடங்கிய இப்பேரணி பந்தல்குடி சாலை, எம்.எஸ். கார்னர், அகமுடையார் மகால், தெற்குத் தெரு, பழைய பேருந்து நிலையம், காசுக்கடை பஜார், மெயின் பஜார் வழியாக திருச்சுழி சாலையை அடைந்தது. பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பேரணியில் அனைவரும் பங்கேற்றனர். காவிக்கொடிக்கு பொதுமக்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, திருச்சுழி சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில இணை செய்தி தொடர்பாளர் முத்து ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகி ராஜா ஒருங்கிணைத்தார். முன்னதாக அருப்புக்கோட்டை நிர்வாகி குருசாமி வரவேற்றார். நிறைவில், மாவட்ட நிர்வாகி மாரிமுத்து நன்றி கூறினார்.