கிருஷ்ணகிரி: ஆதார், பான் அட்டையை தவறாகப் பயன்படுத்தி ரூ.2.53 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது மற்றும் மகனின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லட்சுமி (71). இவரது மகன் ராமகிருஷ்ணன் (37), கூலித் தொழிலாளி. இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவின் விவரம்: நான் ஊத்தங்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலும், எனது மகன் ராமகிருஷ்ணன் மற்றொரு வங்கிக் கிளையிலும் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கச் சென்றபோது, வங்கி மேலாளர் எனது கணக்கு வணிக வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரித்தபோது, ஆம்பூர் வணிக வரி மதிப்பீட்டு வட்டத்தின் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி, எனது பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனம் 2018-19-ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி நிலுவையாக ரூ.2 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 676 செலுத்த வேண்டியுள்ளதால் எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
வணிக வரித்துறை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எங்களது ஆதார், பான் அட்டை நகல்களைத் தவறாகப் பயன்படுத்தி, போலியாக ஜிஎஸ்டி பதிவு பெற்று ரூ.2.53 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், எனது மகன் ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைச் செலுத்தாததால் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முடக்கப்பட்டுள்ள எங்களது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.