தமிழகம்

தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் திமுக முறையீடு

தமிழினி

சென்னை: “தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ‘கடந்த 1.7.2026 அன்று ஆளுநருக்கு அனுப்பட்ட புகாரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. அது குறித்து இன்று ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் தவெக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக வைகோ அளித்த பேட்டியில் தெரிவித்ததை ஆளுநரிடம் தெரிவித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி கழக சட்டப்பேரவை உறப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆஸ்டினை தவெக சார்பில் தொடர்பு கொண்டு, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாசனையும் தவெக கட்சியில் இணையும்படியும், 50 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாரியத் தலைவர் பதவி அளிப்பதாகவும் ஆசைகாட்டி பேசியதாக ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

முதல்வரின் நண்பர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும், அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், அதேபோல் முதல்வரின் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக அவரின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல்வருடன் சட்டத்துக்குப் புறம்பாக அவருடனே பயணிப்பது குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த புகார்களை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்து, புகார் கடிதத்தை ஆளுநரிடம் அளித்தனர். அனைத்து புகார்களையும், புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த ஆளுநர், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி கூறியது என்ன?

ஆளுநரை சந்தித்து புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டுள்ள குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் நேரடியாக விளக்கினோம். அரசிற்குத் தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சரவைக் கூட்டங்கள் முதல் அனைத்து உயர்மட்டக் கூட்டங்களிலும் முதல்வரோடு கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போடக்கூடிய கேவலமான நிலை உள்ளது.

இதுபற்றி கடந்த 2-ஆம் தேதி புகார் மனு அளித்திருந்தோம். இன்று நேரிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுக்கொண்டோம். ஆளுநரும் அவர்கள் அரசு கூட்டங்களில் கலந்து கொள்ள எந்தவித அதிகாரமும் கிடையாது எனற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். எனவே, அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

குதிரை பேரத்தின் உச்சமாக நேற்றைய தினம் அவதூறு வழக்கிலே திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் கைது செய்யும் நடைமுறை இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் அவரை கைது செய்து 5 மணிநேரம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளனர். அவதூறு வழக்கில் விசாரணையே தேவையில்லை அப்படி இருக்க விசாரணை என்ற பெயரில் குதிரை பேரம் நடத்தினர் என அனிதா ராதாகிருஷ்ணனின் பேட்டியிலேயே தெரியவந்தது. தவெகவில் இணைந்துவிடுங்கள் என பேரம் பேசி உள்ளனர்.

அதேபோல திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினை தொடர்பு கொண்டு எந்த அமைச்சர் பதவி கேட்கிறீர்களோ அந்த இலாகாவை தருகிறோம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என பேரம் பேசி உள்ளனர். அதோடு வேப்பனஹல்லி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள சீனிவாசனை தொடர்பு கொண்டு ‘50 கோடி ரூபாய் தருகிறோம், என்ன வாரியம் கேட்கிறீர்களோ அதை கொடுக்கிறோம்’ பதவியை ராஜினாமா செய்யுமாறு பேரம் பேசி உள்ளனர்.

இது அனைத்தையும் புகாராக ஆளுநரிடம் அளித்துள்ளோம். ஆள்பிடிக்கும் பணியை தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் இந்த தவெக அரசு செய்யவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறி உள்ளோம். நாங்கள் அளித்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT