சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கூடுதலாக ரூ.58.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு வார்டு வாரியாக தலா ரூ.5 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக 15 மண்டலங்களுக்கும் மொத்தம் ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்காக 150 உயர் திறன் மோட்டார்கள் மற்றும் 500 டிராக்டர் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள், பம்புகள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1,000 பணியாளர்கள்
பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இவர்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.