சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு படைகள் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.152 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் பொருட்களாகவோ கொண்டு செல்ல அனுமதி இல்லை.
விதிமீறல்களை கண்காணிக்க தமிழம் முழுவதும் தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கணிசமான அளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி ரொக்கமாக ரூ.30.53 கோடி, ரூ.72 லட்சம் மதிப்பு மதுபானம், ரூ.6.47 கோடி மதிப்பு போதைப்பொருட்கள், ரூ.92.02 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.22.19 கோடி மதிப்பிலான இலவசமாக வழங்க வைத்திருந்த பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் என மொத்தம் ரூ.152 கோடி மதி்ப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.